பிரச்சினைக்கு வன்முறை தீர்வல்ல: இலங்கை திருச்சபை

பிரச்சினைக்கு வன்முறை தீர்வல்ல என்பதை உள்நாட்டு யுத்தம் புலப்படுத்துகிறது: இலங்கை திருச்சபை

by Staff Writer 19-05-2021 | 1:11 PM
Colombo (News 1st) பிரச்சினைக்கான தீர்வு வன்முறை அல்லவென இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தினூடாக புலப்படுவதாக இலங்கை திருச்சபை பேராயர்கள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு யுத்தத்தின் வருடாந்த நினைவு தினம் தொடர்பில் இலங்கை திருச்சபையினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நடவடிக்கைகளின் போது உயிர்நீத்த அனைவருக்காகவும் காணாமல் போனவர்களுக்காகவும் உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்பட்டோருக்கும் தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்காகவும் தாம் பிரார்த்திப்பதாக இலங்கை திருச்சபை பேராயர்கள் குறிப்பிட்டுள்ளனர். சுதந்திரத்தின் உயர்ந்த குறிக்கோள்களை நிலைநிறுத்த வேண்டுமென்பதனையும் சமத்துவமும் நீதியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்பதனையும் யுத்தத்தின் கடைசி நாட்கள் உணர்த்துவதாக அவர்கள் கூறியுள்ளனர். அத்துடன், பிரச்சினை எந்த கோணத்தில் வந்தாலும் அதற்கு வன்முறை தீர்வாக அமையாது என்பதையும் உள்நாட்டு யுத்தம் புலப்படுத்துவதாக இலங்கை திருச்சபை பேராயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டில் புரையோடிப்போயுள்ள குரோதம், பகைமை நீங்க உறுதியாக செயற்பட வேண்டுமெனவும் பாரபட்சம் நீங்கி அர்ப்பணிப்போடும் திடசங்கற்பத்துடனும் நீதியை நிலைநாட்ட செயற்பட வேண்டுமெனவும் இலங்கை திருச்சபை பேராயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.