துறைமுக நகர் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பை பிற்போடுமாறு மதத் தலைவர்கள் கோரிக்கை

துறைமுக நகர் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பை பிற்போடுமாறு மதத் தலைவர்கள் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

19 May, 2021 | 6:42 pm

Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர் விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பை பிற்போடுமாறு மதத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தினர்.

நாட்டில் COVID பெருந்தொற்று பரவுகின்ற நிலையில், மிக அவசரமாக துறைமுக நகர் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான தேவை என்ன என கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன் வௌிப்படைத்தன்மை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பேராயர் கூறியுள்ளார்.

நாட்டின் வளங்களை பிறருக்கு வழங்குவதற்கு முன்னர், அதற்கான அனுமதியை நாட்டு மக்களிடம் பெற வேண்டும் என பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

25 திருத்தங்களை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில், உடனடியாக அதனை மேற்கொண்டு வாக்கெடுப்பு நடத்த வேண்டாம் எனவும், சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பை தாமதிக்குமாறும் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 25 திருத்தங்களை மிக அவசரமாக எவ்வாறு சட்டமூலத்தில் உள்ளடக்குவது என எல்லே குணவன்ச தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டமூலத்தை நிறைவேற்றிய பின்னரா அதில் திருத்தங்களை மேற்கொள்வது எனவும் தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களை ஆணைக்குழு உறுப்பினர்களாக நியமிக்க வேண்டாம் எனவும் எல்லே குணவன்ச தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்