கிளிநொச்சியில் நேற்று 61 பேருக்கு கொரோனா தொற்று; கரைச்சி பிரதேச சபை முற்றாக முடக்கம்

by Bella Dalima 19-05-2021 | 5:00 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபை முற்றாகவும் பொதுச்சந்தை பகுதியளவிலும் முடக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் படி, நேற்றைய தினம் 61 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது இனங்காணப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டதால், இன்றைய தினம் பிரதேச சபை முற்றாக முடக்கப்பட்டு, சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் குறிப்பிட்டார். இதேவேளை, கிளிநொச்சி பொதுச்சந்தையில் வெற்றிலைக் கடை உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்றைய தினம் இனங்காணப்பட்டதை அடுத்து, பொதுச்சந்தையின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மன்னார் - துருக்கி சிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. சுமார் 100 படுக்கைகளுடன் குறித்த கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை நிலையத்தை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் நேற்று கண்காணித்தனர். கொரோனா தொற்று நிலைமை தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று தோப்பூர் உப பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. மூதூர் பிரதேச செயலாளர், சுகாதார தரப்பினர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர். நுவரெலியா - டயகம ஆதார வைத்தியசாலையின் உதவி வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி ஆர். ஜெயராஜன் தெரிவித்தார். குறித்த வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கும் ஏணைய உத்தியோகத்தர்களுக்கும் PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.