by Bella Dalima 18-05-2021 | 9:01 PM
Colombo (News 1st) கடந்த நான்கு நாட்களில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு காரணமாக அரசாங்கத்திற்கு 6000 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்காக 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. அதற்காக 56,593 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது. சுகாதாரம், அடிப்படை வசதிகள் மற்றும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக 29 ,045 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டார்.
மேலும், 2020 ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் வழங்கப்பட்ட நிவாரணங்களுக்காக 7073 மில்லியன் ரூபாவும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்காக 10,000 ரூபா பெறுமதியான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. அதற்காக 2,846 மில்லியன் ரூபாவும் COVID காரணமாக வருமானத்தை இழந்த அரச நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 301 மில்லியன் ரூபாவும் மாவட்ட செயலகங்களால் மேற்கொள்ளப்பட்ட ஏனைய வசதிகளுக்காக 102 மில்லியன் ரூபாவும் விவசாயப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 88 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக அஜித் நிவாட் கப்ரால் கூறினார்.
அனைத்து செலவுகளையும் சேர்த்தால், 96,058 மில்லியன் ரூபா, அதாவது 96 பில்லியன் ரூபா செலவாகியுள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டில் 41. 9 பில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மொத்தமாக 138 பில்லியன் ரூபாவை அரசாங்கம் COVID-இற்காக செலவு செய்துள்ளதாக அஜித் நிவாட் கப்ரால் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.