by Staff Writer 18-05-2021 | 8:06 PM
Colombo (News 1st) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் மட்டக்களப்பு - கல்குடா பகுதியில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரை நினைவுகூர்வதற்காக கல்குடாவில் சிலர் முயன்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.
இது தொடர்பாக இன்று காலை ஒருவரும் பின்னர் 9 பேரும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை நாளை (19) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
வாழைச்சேனை, கல்குடா, கிரான் பகுதிகளை சேர்ந்தவர்களே இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நவாலி புனித பேதுரு தேவாலயத்திலுள்ள நினைவுத்தூபியில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் உள்ளிட்ட சிலரை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
இதனிடையே பரந்தன் - முல்லைத்தீவு வீதியின் நெத்தலியாறு பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனைச்சாவடியூடாக மக்கள் பயணிக்க இன்று அதிகாலை முதல் அனுமதிக்கப்படவில்லை.
அத்தியாவசிய தேவைகளுக்காக செல்கின்ற நோயாளர் முதல் எவரும் அனுமதிக்கப்படவில்லை என மக்கள் கூறினர்.
நான்கு மணித்தியாலங்களுக்கு பின்பு அரச உத்தியோகத்தர்கள், நோயாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டனர்.