முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் இன்றாகும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் இன்றாகும்

எழுத்தாளர் Staff Writer

18 May, 2021 | 1:43 pm

Colombo (News 1st) யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்றாகும்.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமை மற்றும் சுகாதார கட்டுப்பாடுகள் காரணமாக இம் முறை அதிகளவில் மக்கள் ஒன்றுகூடாத வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி வவுனியா குட்செட் வீதி ஶ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று (18) பிரார்த்தனை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வழிபாடுகள் நடத்தப்பட்டதுடன் சமூக ஆர்வலர்களும் உறவுகளை இழந்த சிலரும் இதில் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன்போது நெய்தீபம் ஏற்றப்பட்டதுடன் விசேட பூஜைகளும் இடம்பெற்றன.

வழிபாடுகளில் ஈடுபட்டவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தனர்

இதனிடையே, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

யாழ். மாநகர சபையிலும் இன்று கொவிட் 19 சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக நினைவேந்தல் இடம்பெற்றது.

மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் உள்ளிட்ட உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் மன்னாரில் இன்று முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்தது.

முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மனித பேரவலம் தமிழினத்தின் மீதான இனவழிப்பின் ஆரம்பமோ, முடிவோ அல்ல, நீண்ட தொடரான இனவழிப்பின் ஒரு அங்கம் மாத்திரமே என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்தது.

தொடர் இனவழிப்பிலிருந்து தமிழ் மக்களை பாதுகாக்க சர்வதேச நீதிப் பொறிமுறையின் கீழ் நீதி வழங்கப்பட வேண்டும் என அந்த இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய சம்பவம் மீள நிகழாதிருப்பதை உறுதி செய்ய சர்வதேசத்தினால் நடத்தி, கண்காணிக்கப்படும் வடக்கு, கிழக்கு தழுவிய சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் குறிப்பிட்டது.

இதனிடையே, நினைவிடத்தை அழித்தாலும் நினைவுகளை அழிக்க முடியாது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் பொங்கும் உணர்வுகளோடு அழுது ஆறிச்செல்லும் முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் தூபி மிலேச்சத்தனமாக அழிக்கப்பட்டு நினைவுக் கல்லும் வஞ்சகமாக கவர்ந்து செல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்