நான் தவறிழைத்திருந்தால் மரண தண்டனை வழங்குங்கள்: ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு

நான் தவறிழைத்திருந்தால் மரண தண்டனை வழங்குங்கள்: ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

18 May, 2021 | 6:16 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலுடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தவறிழைத்திருந்தால் விசாரணைகளை நடத்தி மரண தண்டனை விதிக்குமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ரிஷாட் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்றத்திற்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

இதன்போதே, தான் தவறிழைத்திருந்தால் தனக்கு தண்டனை வழங்குமாறு பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தனக்கு எதிராக இன்னும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை எனவும் தனது விவகாரம் தொடர்பிலான மூன்று கோவைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட போதிலும் அவர்கள் வழக்கு தாக்கல் செய்யவில்லை எனவும் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து, நான்காம் மாடியில் தடுத்து வைத்து ஒவ்வொரு கேள்விகளைக் கேட்கின்றனர். பயங்கரவாத தடைச்சட்டம் என்பது ஒரு காட்டுச்சட்டம், நான் தவறு செய்திருந்தால் விசாரணை செய்து எனக்கு மரண தண்டனை வழங்குங்கள்

என பாராளுமன்றத்தில் அவர் குறிப்பிட்டார்.

தற்போது பொலிஸ் மா அதிபராக உள்ளவரும் தான் எந்த தவறையும் செய்யவில்லலையென பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஆளும் கட்சியினர் தனக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகளில், கொலோசியஸ் நிறுவனத்தினால் செப்பு வழங்கப்பட்டமை உள்ளிட்டவை இருந்ததாகவும் ஆனால், அது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை எனவும் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.

ஒரு மத குருவை திருப்திப்படுத்துவதற்காக இன்று என்னை சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தை ஜனாதிபதி தமக்கு தேவையான விதத்தில் பயன்படுத்த முடியாது

என அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்