தொழில் ஆணையாளருக்கு வே.இராதாகிருஷ்ணன் கடிதம்

தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு தொழில் ஆணையாளருக்கு வே.இராதாகிருஷ்ணன் கடிதம்

by Staff Writer 18-05-2021 | 7:39 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கமான மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தொழில் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட்ட பின்னர் தொழிலாளர்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகவும் அது குறித்து தொழில் ஆணையாளர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வே.இராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. கம்பனிகளையும் தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தொழில் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனின் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களை அடிமைகளைப் போன்று நடத்த இடமளிக்க முடியாது எனவும், தோட்ட அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைநாட்கள், சமூக நல உத்தியோகத்தர்கள், சிறுவர் பராமரிப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படாமை, மேலதிக கொழுந்து கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட11 விடயங்கள் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன, பெருந்தோட்டக் கம்பனிகளின் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு கடிதத்தின் பிரதிகள் அனுப்பப்பட்டுள்ளன.