கொழும்பு துறைமுக நகர் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் திருத்தங்களுக்கு அரசாங்கம் இணக்கம்

கொழும்பு துறைமுக நகர் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் திருத்தங்களுக்கு அரசாங்கம் இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

18 May, 2021 | 5:43 pm

Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர் விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் அனைத்து பரிந்துரைகள் மற்றும் திருத்தங்களுக்கு இணங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுக நகர் விசேட பொருளாதார சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார்.

சட்டமூலத்தில் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு ஏற்புடையதாக இல்லை என உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டதற்கு அமைவாக சில சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு மற்றும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர அதிகார எல்லையிலுள்ள சகல மக்களுக்குமான சட்டம் மற்றும் அபிவிருத்தி உத்தரவுகளை தயாரித்தல், அவற்றை மறுசீரமைத்தல், அவை மீறப்படும் போது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்காக அதனை துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிடம் கையளிப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள அதிகாரங்கள், அரசியலமைப்பிற்கு ஏற்புடையதாக இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பிற்கு முரணான சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், நீதிமன்றம் கூறிய மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுமானால் தமது பரிந்துரைகள் நீங்கும் என உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, மேலும் சில சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் கட்டளை அதிகார சபை, அதிகாரமுடைய சொத்து முகாமைத்துவ அதிகார சபை மற்றும் பாதுகாப்பு, பரிவர்த்தனை ஆணைக்குழு, துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு, ஏதேனுமொரு விடயத்திற்கு அனுமதி பெறாவிடில், இணக்கப்பாட்டை கோரும் சந்தர்ப்பத்தில் அதனை முக்கிய விடயமாகக் கருதி வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டு உள்ளடக்கப்பட்ட சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குமுறை அதிகார சபையாக அடையாளப்படுத்தப்படும் நிறுவனங்களின் அதிகாரங்களை பொருட்படுத்தாது, கொழும்பு முறைமுக நகர எல்லை அதிகாரத்திற்குட்பட்ட வகையில் சட்டமூலத்தில் குறிப்பிட்ட அல்லது கட்டளைகளை தயாரிப்பதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரமளிக்கும் சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இணக்கப்பாடு அவசியம் என உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்