கலவர பூமியான காசா; தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்

கலவர பூமியான காசா; தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்

கலவர பூமியான காசா; தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்

எழுத்தாளர் Bella Dalima

18 May, 2021 | 3:50 pm

Colombo (News 1st) இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதலால் காசாவின் உட்கட்டமைப்புகள் உருக்குலைந்து வருகின்றன. நேற்று (17) அதிகாலை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தினா் பயன்படுத்தி வந்த 15 கிலோமீட்டர் தூரமுள்ள சுரங்கப் பாதை தகா்க்கப்பட்டதாகவும், ஹமாஸ் தளபதிகள் 9 பேரின் வீடுகள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

முந்தைய நாள் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலை விட இது கடுமையானது என காசாவில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்தினா் இடையே கடந்த ஒரு வாரமாக மோதல் நடைபெற்று வரும் நிலையில், காசா நகரம் மீதான தாக்குதலை இஸ்ரேல் அதிகரித்துள்ளது. சமீப நாட்களாக இஸ்ரேல் காசா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடங்களைக் குறிவைத்து தாக்கி வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் காசாவில் உள்ள மூன்று மாடி குடியிருப்புக் கட்டடம் கடுமையாக சேதமடைந்தது. தாக்குதலுக்கு 10 நிமிடங்களுக்கு முன்னா் அதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் தகவல் தெரிவித்ததைத் தொடா்ந்து, அங்கிருந்து வெளியேறியதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

காசா மேயா் அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இஸ்ரேலின் வான்வழி தாக்குதலால் காசாவின் உட்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதல் நீடித்தால் நிலைமை மிக மோசமாகும் என கூறியுள்ளார்.

காசா பிராந்தியத்தின் ஒரே ஒரு மின் நிலையமும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக செயற்படாமல் போகும் அபாயத்தில் இருப்பதாக ஐ.நா.வும் எச்சரித்துள்ளது.

காசாவில் ஏற்கெனவே தினமும் 8 முதல் 12 மணி நேரம் வரை மின் தடை இருக்கும் நிலையில், மின் நிலையம் செயற்படாவிட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் இயக்கத்தினா் இடையிலான மோதல் கடந்த வார ஆரம்பத்தில் தொடங்கியது. ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேல் காவல் படையினா் நுழைந்ததையடுத்து, ஆயிரக்கணக்கான பாலஸ்தீனா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மசூதியில் வழிபாட்டுக்காக சென்ற சிலா் கோஷமிட்டதாகவும் அவா்களைத் தடுக்கவே இஸ்ரேல் காவலா்கள் மசூதிக்குள் நுழைந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆா்ப்பாட்டக்காரா்களை இஸ்ரேல் காவல் படையினா் கலைக்கும்போது வன்முறை ஏற்பட்டு இரு தரப்புக்கும் இடையே பெரும் மோதல் உருவானது. இதைத் தொடா்ந்து, இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஹமாஸ் இயக்கத்தினா், ஜெருசலேம் நகரை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தினா். பதிலடியாக இஸ்ரேல் இராணுவம் காசா மீது வான்வழி தாக்குதலைத் தொடங்கியது.

இதுவரையிலான தாக்குதலில் 58 குழந்தைகள், 35 பெண்கள் உள்பட 198 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டதாகவும், 1,300 போ் காயமடைந்ததாகவும், இஸ்ரேல் தரப்பில் 8 போ் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தாக்குதலில் காசாவில் சா்வதேச ஊடகங்கள் செயற்பட்டு வந்த கட்டடம் உட்பட பல கட்டடங்கள் தரைமட்டமாகின.

ஹமாஸின் ராக்கெட் தாக்குதலை இஸ்ரேல் நடுவானில் இடைமறித்து அழித்து வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்