இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக உள்நாட்டு மருந்து

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக உள்நாட்டு தயாரிப்பை விநியோகிக்க ஆரம்பம்

by Staff Writer 17-05-2021 | 3:04 PM
Colombo (News 1st) கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க உள்நாட்டு தயாரிப்பிலான புதிய மருந்து விநியோகத்தை இந்தியா ஆரம்பித்துள்ளது. தலைநகர் டில்லியில் உள்ள வைத்தியசாலைகளில் உள்ளூர் தயாரிப்பிலான 2-deoxy-D-glucose (2-DG) மருந்துகளை பயன்படுத்த அதிகாரிகள் அனுமதியளித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. COVID - 19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்றும் நோக்கில், குறிப்பிடத்தக்களவு பயனையேனும் இந்த மருந்துகள் வழங்குமென அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த மருந்தினை தனியார் மருந்து நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு தயாரித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மருந்தினூடாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளர்கள் குணமடைவதில் முன்னேற்றம் காணப்படுவதாக இந்திய அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவில் முதற்தடவையாக நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 281,000 பேர் மாத்திரமே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, கடந்த மாதம் 21 ஆம் திகதியின் பின்னர் மூன்று இலட்சத்திற்கும் குறைந்த நோயாளர்கள் பதிவாகும் முதலாவது சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், கடந்த 24 மணித்தியாலங்களில் 4106 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கடந்த மாதம் 28 ஆம் திகதியின் பின்னர் நாளாந்தம் மூவாயிரத்திற்கும் அதிக கொரோனா மரணங்கள் பதிவாகி வருகின்றன.