2ஆம் கட்ட அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசிகளை பெற திட்டம்

இரண்டாம் கட்ட அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசிகளை எதிர்வரும் வாரங்களில் பெற்றுக் கொள்ள நடவடிக்கை

by Staff Writer 16-05-2021 | 2:36 PM
Colombo (News 1st) இந்தியாவின் சீரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் அஸ்ட்ராசெனெக்கா (AstraZeneca) தடுப்பூசிகளில், இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை எதிர்வரும் மூன்று வாரங்களில் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். அஸ்ட்ராசெனெக்காவின் முதல் தடுப்பூசி ஏற்றப்பட்டு 14 முதல் 16 வாரங்களுக்குள் இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும். இந்நிலையில், முதல் தடுப்பூசி ஏற்றப்பட்டோருக்கு இரண்டாவது தடுப்பூசியை வழங்க இன்னும் 4 வாரங்களே உள்ளதாக வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். இதனை கருத்திற்கொண்டு, இரண்டாம் கட்டத்திற்கு தேவையான 6 இலட்சம் தடுப்பூசிகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சீனாவில் தயாரிக்கப்படும் Sinopharm தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் இன்றும் கொழும்பில் முன்னெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில், மாளிகாவத்தையிலுள்ள P.D. Sirisena விளையாட்டரங்கு, வௌ்ளவத்தை Roxy Garden, மட்டக்குளி Vystwyke விளையாட்டரங்கு, கிருலப்பனை முகலன் வீதி - சித்துமின பொதுநோக்கு மண்டபம் மற்றும் கெத்தாராம விஹாரை ஆகிய பகுதிகளில் தடுப்பூசிகள் ஏற்றப்படுவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்