மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு; மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

by Staff Writer 15-05-2021 | 2:21 PM
Colombo (News 1st) நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழையினால் 6 பிரதான ஆறுகளின் நீர்மட்டம் வௌ்ள மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. களனி, கிங், நில்வளா, களு கங்கை, குடா கங்கை, அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ மற்றும் இடர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ்.டி.சி. சுகீஷ்வர தெரிவித்தார். இதேவேளை, நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உரித்தான 12 நீர்த்தேக்கங்கள் வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, வௌ்ளம் காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். மழையுடனான வானிலையால் பிறப்பிக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று இரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, காலி மாவட்டத்தின் நியாகம, நெலுவ, எல்பிட்டிய, பத்தேகம, தவலம, காலி, யக்கலமுல்ல , நாகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர குறிப்பிட்டார். களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, அகலவத்தை, வலல்லாவிட்ட, மத்துகம, தொடங்கொட, இங்கிரிய மற்றும் புலத்சிங்ஹல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல மற்றும் தெஹிஓவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பிரதேச செயலாளர் பிரிவிற்கு 2 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், எலபாத்த, அயகம, கலவான, குருவிட்ட, நிவித்திகல, இரத்தினபுரி மற்றும் கிரிஎல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் போது மண்சரிவு அபாயம் தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர குறிப்பிட்டார். அத்துடன், தொடர்ச்சியாக மழை பெய்வதால் கண்டி, நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளம் - ஆராச்சிக்கட்டு பிரதேச செயலகத்திற்குட்பட்ட முத்துப்பந்தி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளதினால், கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார் நுவரெலியா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. மலையகத்தின் பல பகுதிகளில் இரவு பெய்த மழை சற்று குறைவடைந்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.