தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்

by Bella Dalima 15-05-2021 | 5:01 PM
Colombo (News 1st) தமிழகத்தில் இன்று (15) முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் புதிய ஊரடங்கு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கிடையிலும் பயணம் செய்ய ePass கட்டாயமாக தேவையென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மாத்திரமே திறக்கப்பட வேண்டுமெனவும் இவற்றில், ஒரே நேரத்தில் 50 வீத வாடிக்கையாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். ATM, எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஆகியன வழமை போன்று செயற்படுமென்பதுடன், ஆங்கில மற்றும் உள்ளூர் மருந்துக் கடைகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை செயற்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இவையனைத்தையும் திறக்க அனுமதி இல்லையென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே அறிவித்தவாறு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமுல்படுத்தப்படுமெனவும் முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவின் பல பகுதிகளிலும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது.