கொரோனா: நாட்டில் ஒரு மாதத்தில் 241 பேர் உயிரிழப்பு

நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா தொற்றினால் 241 பேர் உயிரிழப்பு

by Staff Writer 14-05-2021 | 2:33 PM
Colombo (News 1st) கடந்த ஒரு மாதத்தில் கொரோனா தொற்றினால் 241 பேர் நாட்டில் உயிரிழந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். ஒரு மாத காலப்பகுதியில் 38,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கடந்த மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் ஏற்பட்ட மூன்றாவது கொரோனா அலையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார். கொரோனா தொற்றுக்குள்ளான 2,269 பேர் நேற்று மாத்திரம் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் அதிகளவான 683 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 301 பேருக்கும் இரத்தினபுரியில் 174 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. காலியில் 155 பேருக்கும் களுத்துறையில் 121 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி கூறினார். குருநாகலில் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 24 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில், இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 896 ஆக அதிகரித்துள்ளது. தம்புள்ளை, கம்பளை, பொரளை, இராகமை, வென்னருவ, காலி, அம்பலாங்கொடை, அஹங்கம , மஹகம , கொஸ்வத்தை , கல்கிசை, ஹிந்தகல, கலகெடிஹேன, வெல்லம்பிட்டி, கோணபல, ரிகில்லகஸ்கட , ஜயந்திபுர, பொல்கொல்ல , பூண்டுலோயா , நானுஓயா, மடபாத்த, கோணபல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 47 முதல் 87 வயதிற்கிடைப்பட்டவர்களே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை1, 35,796 ஆக பதிவாகியுள்ளது. இவர்களில் 26,126 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,08,802 ஆக அதிகரித்துள்ளது.