சில பகுதிகளுக்கு வௌ்ளம், மண்சரிவு அபாய எச்சரிக்கை

அகலவத்தையில் அதிகூடிய மழைவீழ்ச்சி; சில பகுதிகளுக்கு வௌ்ளம், மண்சரிவு அபாய எச்சரிக்கை

by Staff Writer 14-05-2021 | 2:24 PM
Colombo (News 1st) இன்று (14) காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அகலவத்தை பகுதியில் பதிவாகியுள்ளது. அகலவத்தை பகுதியில் 336 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொத்திவல பகுதியில் 332 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் அகயகந்த கெட்டன்தொல பகுதியில் 318 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. இதேவேளை களுகங்கை, களனி ஆறு, கின் கங்கை , நில்வலா கங்கை , அத்தனகளு ஓயா மற்றும் மா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வௌ்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர், பொறியியலாளர் S.D.C.சுகீஸ்வர தெரிவித்துள்ளார். கின் கங்கையை அண்மித்துள்ள நாகொட, தவளம பகுதிகளிலும் களு கங்கையை அண்மித்துள்ள புலத்சிங்ஹல, பாலிந்தநுவர, பதுரலிய உள்ளிட்ட பகுதிகளிலும் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். மா - ஓயாவை அண்மித்துள்ள கிரிஉல்ல பகுதியிலும் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, களனி ஆற்றை அண்மித்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, களனி ஆறு ஊடறுத்து செல்லக்கூடிய கொலன்னாவ, பியகம, மல்வான, கொழும்பு ஆகிய பகுதிகளிலும் வௌ்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. வௌ்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர், பொறியியலாளர் S.D.C.சுகீஸ்வர கோரிக்கை விடுத்துள்ளார். புத்தளம் மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். இதேவேளை காலி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, காலி மாவட்டத்தின் நியாகம, நெலுவ, எல்பிட்டிய, பத்தேகம, தவலம, காலி, யக்கலமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர குறிப்பிட்டார். காலி மாவட்டத்தின் நாகொட பிரதேச செயலாளர் பிரிவிற்கு முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, அகலவத்தை, வலல்லாவிட்ட, மத்துகம, தொடங்கொட, இங்கிரிய மற்றும் புலத்சிங்ஹல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலாளர் பிரிவிற்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல மற்றும் தெஹிஓவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர பிரதேச செயலாளர் பிரிவிற்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பிரதேச செயலாளர் பிரிவிற்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், எலபாத்த, அயகம, கலவான, குருவிட்ட, நிவித்திகல, இரத்தினபுரி மற்றும் கிரிஎல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் போது மண்சரிவு அபாயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர தெரிவித்தார். இதேவேளை, வரக்காபொல, கஸ்னாவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 54 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண்ணொருவர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பலத்த மழையினை தொடர்ந்து, நேற்றிரவு இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதனிடையே, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவினால் குறித்த பகுதியில் ஒருவழி போக்குவரத்து மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். கம்பளை , உனம்புவ பகுதியிலும் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதேவேளை, சீரற்ற வானிலையால் தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனை தவிர நோர்ட்டன், கெனியன், குகுலே கங்கை மற்றும் உடவளவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்து நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றும் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்