Colombo (News 1st) யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் முற்றத்திலுள்ள நினைவுத்தூபிக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நினைவேந்தல் முற்றத்தில் நிறுவுவதற்காக நேற்று (12) மாலை வைக்கப்பட்டிருந்த ஞாபகார்த்த கல்லொன்றும் காணாமற்போயுள்ளது.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், ஞாபகார்த்த கல்லொன்றினை நிறுவும் ஏற்பாடுகள் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தன.
கத்தோலிக்க குருமார்களும் சிவில் அமைப்பினரும் இணைந்து நேற்று மாலை ஞாபகார்த்த கல்லினை நினைவேந்தல் முற்றத்திற்கு பாரந்தூக்கியின் ஊடாக கொண்டு சென்றிருந்தனர்.
ஞாபகார்த்தக் கல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, ஏற்பாட்டாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
அதன் பின்னர், ஞாபகார்த்த கல்லை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஏற்பாட்டாளர்கள் வைத்து விட்டு சென்றிருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை குறித்த ஞாபகார்த்த கல் வைத்த இடத்திலிருந்து காணாமற்போயுள்ளது.
இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடு பின்னர் மீளப் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திலுள்ள நினைவுத்தூபிக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் சென்றிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சட்டம், ஒழுங்கு மறுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சேதமாக்கப்பட்ட சம்பவத்திற்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரிப்பதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.