சுவாசக் கோளாறு ஏற்படும் நோயாளிகளுக்காக ஒக்சிஜன் சிகிச்சை உபகரண தொகுதி தயாரிப்பு

by Staff Writer 13-05-2021 | 9:06 PM
Colombo (News 1st) COVID தொற்று காரணமாக சுவாசக் கோளாறு ஏற்படும் நோயாளிகளுக்காக வெப்ப ஈரப்பதமூட்டப்பட்ட ஒக்சிஜன் சிகிச்சைக்கான உபகரண தொகுதியொன்றை இலங்கை விமானப் படை தயாரித்துள்ளது. இந்த உபகரண தொகுதி ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஸவிடம் நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந்த உபகரணத் தொகுதி செயற்பாடு தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை பிரிவை தயாரிப்பதற்கு 15 இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தாலும் 3 இலட்சம் ரூபா செலவில் தயாரிப்புப் பணிகளை விமானப் படையினர் பூர்த்தி செய்துள்ளனர். இத்தகைய 50 சிகிச்சை தொகுதிகளை தயாரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார தரப்பினரின் தேவைக்கு அமைய தொடர்ச்சியாக தயாரிப்புப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. "வித்தியாஜோதி" கலாநிதி பந்துல விஜேயின் என்னக் கருவிற்கு அமைய, பேராசிரியர் ரணில் டி சில்வா மற்றும் டொக்டர் திலங்க ரத்னபால ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் இந்த தயாரிப்புப் பணிகளுக்கு ஒத்துழைப்வை வழங்கியிருந்தனர். இலங்கை ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் அனுமதி மற்றும் மின்னியல் உபகரண பாதுகாப்பு தரம் தொடர்பிலான மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையுடன் விமானப் படையின் பொறியியல் படைப்பிரிவு இந்த உபகரண தொகுதியை தயாரித்துள்ளது.