இன்று (13) இரவு முதல் திங்கட்கிழமை வரை வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை 

by Staff Writer 13-05-2021 | 10:30 AM
Colombo (News 1st) இன்றிரவு (13) 11 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில், மக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இந்தக் காலப் பகுதியில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், குறித்த தினங்களில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை எனவும் அவர் இதன்போது கூறினார். அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரமே போக்குவரத்துகளை மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்ட அவர், வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என கூறினார். இவைதவிர, மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மற்றும் மருந்துப்பொருட்களை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள குறித்த 3 நாட்களின் பின்னர் அதாவது எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னரே தேசிய அடையாள அட்டை முறை அமுல்படுத்தப்படும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அதற்கமைய வௌ்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் முழுமையாக போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வலியுறுத்தினார். இதேவேளை, 07 தரப்பினருக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என சுகாதார அமைச்சினால் அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், சுகாதார சேவைகள், பொலிஸார், முப்படையினர், அத்தியாவசிய உத்தியோகபூர்வ பயணங்களில் ஈடுபடும் அரச அதிகாரிகள், அத்தியாவசிய பொருட்களின் விநியோகம், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர், குடும்பத்தில் நெருங்கிய உறுப்பினரின் மரண சடங்குகள், வௌிநாட்டுப் பயணம், வௌிநாட்டிலிருந்து தாயகம் திரும்புபவர்கள், இறக்குமதி, ஏற்றுமதி சேவைகள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிக்கும் அனுமதி சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாகவே வழங்கப்படும்.