தனிமைப்படுத்தல் தொடர்பில் வௌியான அறிவிப்பு

வௌிநாடுகளில் இருந்து வருவோருக்கு தனிமைப்படுத்தல் அவசியமா? 

by Staff Writer 12-05-2021 | 8:54 AM
Colombo (News 1st) வௌிநாடுகளிலிருந்து வருகைதரும் இலங்கையர்கள், இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள், வௌிநாட்டவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, நாட்டிற்கு அழைத்து வரப்படும் இரண்டு வயதுக்கு குறைந்தவர்களுக்கு மாத்திரம் PCR சோதனையை மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2 வயதுக்கு மேற்பட்ட நாட்டு வருகைதரும் அனைவரும், நாட்டை வந்தடைந்தவுடனும் தனிமைப்படுத்தப்படும் நிலையங்களில் 11 அல்லது 14 ஆவது நாள் இரண்டாவது PCR  சோதனையையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வருகைதரும் அனைத்து பயணிகளும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதன் பின்னர் தங்கியிருக்கும் ஹோட்டல்கள் அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வௌியேற்றப்படுவதுடன், அவர்களுக்கு மேற்கொள்ளப்படும் இரண்டு PCR பரிசோதனைகளிலும் கொவிட் -19 தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.