இஸ்ரேலின் Lod நகரில் அவசரகாலநிலை பிரகடனம்

இஸ்ரேலின் Lod நகரில் அவசரகாலநிலை பிரகடனம்

by Staff Writer 12-05-2021 | 12:13 PM
Colombo (News 1st) இஸ்ரேலின் Lod நகரில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நகரில் கலகமொன்று இடம்பெற்றதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கலகத்தின் போது கார்களுக்குத் தீயிடப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலிய பாதுகாப்புப் பிரிவினருக்கும் பலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே இந்தக் கலகமும் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேலை நோக்கி பலஸ்தீன ஆயுததாரிகளால் பலத்த ரொக்கெட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக காஸா மீது இஸ்ரேலினால் வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த பரஸ்பர தாக்குதல்களில் 40 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலிய வான் தாக்குதலில், காஸா பிராந்தியத்திலுள்ள 13 மாடி குடியிருப்பு கட்டட தொகுதி தகர்க்கப்பட்டதையடுத்து, டெல் அவிவ் நகரை நோக்கி 130 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக பலஸ்தீன ஆயுததாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த கட்டட தொகுதியிலிருந்து வௌியேறுமாறு குடியிருப்பாளர்கள் எச்சரிக்கப்பட்ட சில மணித்தியாலங்களின் பின்னர், அது தகர்க்கப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. முன்னதாக பலஸ்தீன ஆயுததாரிகள் மேற்கொண்ட ரொக்கெட் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே காஸாவில் வான் தாக்குதல் மேற்கொண்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.