மாகாணங்களுக்கு இடையிலான பஸ், ரயில் சேவை இடைநிறுத்தம்

மாகாணங்களுக்கு இடையிலான பஸ், ரயில் சேவை இடைநிறுத்தம்

எழுத்தாளர் Bella Dalima

11 May, 2021 | 7:16 pm

Colombo (News 1st) மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையை இன்று நள்ளிரவு தொடக்கம் இடைநிறுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை விதிப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய போக்குவரத்து சேவையும் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கமாண்டர் நிலான் மிராண்டா குறிப்பிட்டார்.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை நேற்று (10) நள்ளிரவு முதல் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் A.H.பண்டுக ஸ்வர்ணஹங்ச குறிப்பிட்டார்.

எனினும், ஒரு மாகாணத்திலிருந்து மற்றுமொரு மாகாணத்திற்கு அரச சேவைக்காக பயணிக்கும் ஊழியர்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ் சேவை முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.

இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து சேவையும் இன்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார்.

ரயில்வே பொது முகாமையாளரின் தலைமையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மேல் மாகாணத்திற்குள் அலுவலக ரயில்கள் மாத்திரம் இன்று சேவையில் ஈடுபடும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவித்தார்.

அம்பேபுஸ்ஸ, கொச்சிக்கடை, அலுத்கம மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளுக்கு மாத்திரமே இன்று நள்ளிரவுக்கு பின்னர் அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடும் என அவர் குறிப்பிட்டார்.

எனினும், வழமையாக சேவையில் ஈடுபடுத்தப்படும் 48 ரயில்களும் இன்று நள்ளிரவின் பின்னர் சேவையில் ஈடுபடுத்தப்பட மாட்டாது எனவும் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவித்தார்.

இன்றைய கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இன்று நள்ளிரவின் பின்னர் மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்