கடுமையான பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட வேண்டும்: அரச மருத்துவர் சங்கம் வலியுறுத்தல்

கடுமையான பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட வேண்டும்: அரச மருத்துவர் சங்கம் வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

11 May, 2021 | 8:32 pm

Colombo (News 1st) கடுமையான பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட வேண்டும் என அரச மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் COVID-19 வைரஸ் பரவல் தொடர்பில் இலங்கை மருத்துவ சங்கத்தினர், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மற்றும் வைத்திய நிபுணர்கள் ஜனாதிபதியுடன் நேற்று (10) கலந்துரையாடினர்.

சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன கருத்துத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

நான்கு வாரங்களுக்கு முன்னர் தொற்றுக்குள்ளான நோயாளர்களே இரண்டு வாரங்களுக்கு பின்னர் அடையாளங் காணப்படுகின்றனர். அதன் பின்னர் இரண்டு வாரங்களிலேயே நோய் அறிகுறிகள் தென்படுகின்றன. நான்கு வாரங்கள் கழித்து வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்படுகின்ற சிலர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு வாரங்களில் உயிரிழக்கின்ற சம்பவங்கள் பதிவாகின்றன. நாம் தற்போது காணும் மரணங்கள் மற்றும் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு முன்னர் தொற்றுக்குள்ளானவர்களாவர். அடுத்த சில வாரங்களில் பதிவாகும் நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவைக்கு அறிவுறுத்தினோம். தற்போது காணப்படும் பிரித்தானிய வைரஸ் பிறழ்வு முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளின் போது காணப்பட்ட வைரஸ் அல்ல. இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவுகின்றது. அதேபோன்று PCR பரிசோதனை முடிவுகள் வருவதிலும் தாமதமுள்ளது. அவ்வாறெனில், PCR பரிசோதனை முடிவு வருவதற்குள் மேலும் பலருக்கு தொற்று பரவக்கூடும். எனவே, கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை மாத்திரம் தனிமைப்படுத்தி இதனைக் கட்டுப்படுத்த முடியாது என குறிப்பிட்டோம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்