மன்னாரில் மின்னல் தாக்கி சிறுவர் இல்லம் தீப்பற்றியது; எவருக்கும் பாதிப்பில்லை

by Staff Writer 08-05-2021 | 6:09 PM
Colombo (News 1st) மன்னாரில் நேற்றிரவு பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் சிறுவர் இல்லமொன்று சேதமடைந்துள்ளது. எவ்வாறாயினும், சிறுவர் இல்லத்தில் இருந்த எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பதுடன், அனைவரும் பாதுகாப்பாக இடமாற்றப்பட்டுள்ளனர். மின்னல் தாக்கமும் அதன் பிறகு தீப்பற்றி எரிவதும் அங்கிருந்த CCTV கெமராவில் பதிவாகியிருந்தது. மன்னார் - பெட்டா பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றே இடி மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது, குறித்த இல்லத்தின் மின் இணைப்புகள் முழுமையாக எரிந்து சேதமாகியுள்ளன. அனர்த்தம் இடம்பெற்ற போது குறித்த இல்லத்தில் சிறுமிகள் , பாடசாலை மாணவிகள் உட்பட 15 பேர் இருந்துள்ளனர். எவ்வாறாயினும், அவர்கள் அனைவரும் எவ்வித பாதிப்புகளுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு மாற்று இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தை தொடர்ந்து அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.