ருவன்புர அதிவேக வீதி நிர்மாணப் பணிகள் பிரதமர் தலைமையில் ஆரம்பம்

by Bella Dalima 07-05-2021 | 4:47 PM
Colombo (News 1st) ருவன்புர அதிவேக வீதியின் முதலாவது கட்டத்திற்கான நிர்மாணப் பணிகள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. COVID தொற்று காரணமாக இந்த ஆரம்ப வைபவம் அலரி மாளிகையில் இருந்து மெய்நிகர் தொழில்நுட்பத்தினூடாக மேற்கொள்ளப்பட்டது. சுபீட்சத்தின் ​நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் ருவன்புர அதிவேக வீதி 73.9 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்டதாகும். இது நாட்டில் நிர்மாணிக்கப்படும் 7 ஆவது அதிவேக வீதியாகும். ருவன்புர அதிவேக வீதி கஹதுடுவ பகுதிக்கு அண்மையில் இருந்து ஆரம்பமாகி இங்கிரிய , இரத்தினபுரி ஊடாக பெல்மடுல்ல வரை செல்கின்றது. மூன்று கட்டங்களின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இன்று ஆரம்பமாகும் நிர்மாணப் பணிகள் கஹதடுவ முதல் இங்கிரிய வரையானதாகும். கஹதுடுவ முதல் இங்கிரிய வரை 24.3 கிலோமீட்டர் வீதி நிர்மாணிக்கப்படுவதுடன் இதற்காக 54.70 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது . இதற்கான பணிகளை 30 மாதங்களில் நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அதிவேக வீதி நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் பாணந்துறை தொடக்கம் இரத்தினபுரி , கொழும்பு தொடக்கம் வெல்லவாய மற்றும் மட்டக்களப்பு வரை வாகன நெரிசல் குறைவடையும் என பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.