சமயாசமய தொழிலாளர்களுக்கும் 1000 ரூபா சம்பளம்

சமயாசமய தொழிலாளர்களுக்கும் 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும்: தொழில் திணைக்களம் அறிவிப்பு 

by Bella Dalima 07-05-2021 | 7:34 PM
Colombo (News 1st) பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் பதிவு செய்யப்படாத சமயாசமய தொழிலாளர்களுக்கும் நாளாந்த சம்பளம் 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் என தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 05 ஆம் திகதி வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் பிரகாரம், பெருந்தோட்டங்களில் பதிவு செய்யாமல் தொழில் புரியும் ஊழியர்களுக்கும் 1000 ரூபா நாட்சம்பளம் வழங்கப்பட வேண்டும் என தொழில் ஆணையாளர் நாயகத்தினால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை பிராந்தியங்களில் காணப்படும் பெருந்தோட்ட கம்பனிகளின் உரிமையாளர்களுக்கு அறிவிக்குமாறு மாவட்ட தொழில் ஆணையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் தொழில் திணைக்களத்தின் கவனத்திற்கு தாம் கொண்டு வந்திருந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் பதிவு செய்யப்படாத ஊழியர்களுக்கும் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக வழங்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதுடன், இந்த தீர்மானம் முதலாளிமார் சம்மேளனத்திற்கு உத்தியோகபூர்வ கடிதத்தினூடாக அறிவிக்கப்பட்டதாகவும் செந்தில் தொண்டமான் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.