கிளிநொச்சி - மலையாளபுரத்தில் கொரோனா சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

by Staff Writer 07-05-2021 | 8:44 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - மலையாளபுரம் பகுதியில் கொரோனா சிகிச்சை நிலையமொன்று இன்று திறந்து வைக்கப்பட்டது. இராணுவ வைத்தியசாலையாக இயங்கி வந்த வைத்தியசாலை இன்று முதல் COVID சிகிச்சை நிலையமாக இயங்கவுள்ளதுடன் இதில் 200 கட்டில்களுக்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் 200 கட்டில்களைக் கொண்ட COVID சிகிச்சை நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிபர் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த கட்டடம் பொருளாதார மத்திய நிலையத்திற்கென நிர்மாணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். வவுனியா நகரில் பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது, சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களை பொலிஸார் கைது செய்தனர். இதனிடையே மட்டக்களப்பில் COVID நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி - குருமன்வௌி கிராம சேவகர் பிரிவின் பாலர் பாடசாலை வீதியும் இன்று முடக்கப்பட்டிருந்தது. நுவரெலியா - லிந்துலை பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட ஹோல்ரீம் கிராம சேவகர் பிரிவின் சென்கூம்ஸ் தோட்டம் இன்று முதல் முடக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை நகரை அண்மித்துள்ள அரச நிறுவனங்கள் சிலவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பிரதேச செயலகம், இலங்கை தேயிலை சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. புத்தளம் ஆனமடுவ நகரில் கொரோனா சுகாதார வழிமுறைகள் குறித்து பொலிஸாரால் இன்று தௌிவூட்டப்பட்டது. குளியாப்பிட்டியவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்களுக்கு 5000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் பிரதேச செயலகத்தினால் இன்று விநியோகிக்கப்பட்டன.