20-க்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரின் இப்தார் நிகழ்வில் பங்கேற்பு

by Staff Writer 06-05-2021 | 7:15 PM
Colombo (News 1st) முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் சிலரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நேற்று (05) இப்தார் நிகழ்வுக்கு அழைத்திருந்தார். இஸ்லாமிய மதத் தலைவர்கள், மக்களின் பங்கேற்புடன் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் இப்தார் நிகழ்வு, இம்முறை COVID தொற்று காரணமாக ஒரு சிலரது பங்கேற்புடன் நடைபெற்றதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளனர். முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு தௌிவுபடுத்தியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் விசேட கவனம் செலுத்தியதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருபதாவது அரசியலமைப்பு திருத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களான நசீர் அஹமட், எச்.எம்.எம். ஹாரிஸ், அலி ஷப்ரி ரஹீம், எம்.எஸ். தௌபிக், இஷாக் ரஹ்மான், பைசல் காசிம் மற்றும் இருபதாம் திருத்தத்தின் இரட்டை பிரஜாவுரிமை சரத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஷாரப் முதுநபீன் ஆகியோரே இதில் கலந்துகொண்டிருந்தனர்.

ஏனைய செய்திகள்