பசளை, கிருமிநாசினிக்கு தட்டுப்பாடு: வவுனியா விவசாயிகள் விசனம்

பசளை, கிருமிநாசினிக்கு தட்டுப்பாடு: வவுனியா விவசாயிகள் விசனம்

பசளை, கிருமிநாசினிக்கு தட்டுப்பாடு: வவுனியா விவசாயிகள் விசனம்

எழுத்தாளர் Staff Writer

06 May, 2021 | 6:55 pm

Colombo (News 1st) பசளை மற்றும் கிருமிநாசினிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அதிக பணம் கொடுத்தே பசளையை பெற வேண்டியுள்ளதாகவும் வவுனியா மாவட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

ஓமந்தையில் விவசாயத்தை தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள விவசாயிகள் இன்று பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

பசளை மற்றும் கிருமிநாசினி தட்டுப்பாடு காரணமாக அவற்றை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது.

இதேவேளை, வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள கடைகளில் பசளைகளை பெற முடியாமல் விவசாயிகள் திரும்பிச்செல்லும் நிலையும் காணப்படுகின்றது.

விவசாய திணைக்களத்தினால் வழங்கப்படும் மானிய உரத்தினையும் உரிய காலத்தில் பெற முடியாமல் உள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவித்தனர்.

பசளை பற்றாக்குறையை பயன்படுத்தி கறுப்பு சந்தை நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டனர்.

அதிக விலையில் பசளையினை விற்பனை செய்பவர்கள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மலையகத்திலும் இவ்வாறான நிலையே காணப்படுகின்றது.

பண்டாரவளை , வெலிமடை பகுதிகளிலுள்ள உருளைக்கிழங்கு செய்கையாளர்கள் உரிய பசளை மற்றும் கிருமிநாசினி இன்மையால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் மிளகாய் உற்பத்திக்கான உரிய விலையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

பச்சை மிளகாய் மற்றும் கறி மிளகாய் சந்தைகளில் கிலோ 40 தொடக்கம் 50 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுகின்றது.

தமது உற்பத்தி செலவைக் கூட ஈடு செய்ய முடியாத நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகளும் செய்கையாளர்களும் கவலை வௌியிட்டனர்.

தமக்கான நிர்ணய விலை மற்றும் சந்தை வாய்ப்பையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக அமைந்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் 500 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் செய்கை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்