பில்கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் தம்பதி விவாகரத்து செய்ய தீர்மானம் 

பில்கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் தம்பதி விவாகரத்து செய்ய தீர்மானம் 

பில்கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் தம்பதி விவாகரத்து செய்ய தீர்மானம் 

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2021 | 3:36 pm

Colombo (News 1st) உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸும் பரஸ்பரம் விவகாரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பை அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

எங்களுடைய உறவை எப்படி கொண்டு செல்வது என மிக அதிகமாக யோசித்த பிறகு, எங்களுடைய இல்லற வாழ்வை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம்

என்று பில் கேட்ஸ், மெலிண்டா தம்பதி கூறியுள்ளனர்.

1980-களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மெலிண்டா சேர்ந்த போதுதான் அவரை பில் கேட்ஸ் முதன்முறையாக சந்தித்தார்.

இந்த கோடீஸ்வர தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இணைந்து நடத்தி வரும் Bill and Melinda Foundation உலக அளவில் மிகவும் கொடிய நோய்களுக்கு சிகிச்சை தர உதவும் திட்டங்களுக்கும் தடுப்பூசி திட்டங்களுக்கும் நிதியுதவி செய்து அறப்பணிகளை செய்து வருகிறது.

உலக கோடீஸ்வரர்கள், நல்ல நோக்கங்களுக்காக தங்களுடைய தனிப்பட்ட வருவாயில் ஒரு பகுதியை வழங்குவதற்காக The Giving Pledge என்ற அமைப்பை பிரபல முதலீட்டாளர் வாரென் பஃபெட்டுடன் சேர்ந்து உருவாக்கினார் கேட்ஸ்.

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட பட்டியலின்படி 124 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள சொத்துகளுடன் உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் பில் கேட்ஸ் இருக்கிறார்.

1970-களில் உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக மைக்ரோசாஃப்டை உருவாக்கிய பிறகு அதன் மூலம் தமது சொத்துகளை சேர்த்தார் பில் கேட்ஸ்.

இந்த நிலையில், தங்களுடைய மண வாழ்வு முறிவு தொடர்பான அறிக்கையில்,

கடந்த 27 ஆண்டுகளாக எங்களுடைய சிறந்த பிள்ளைகளை வளர்த்தெடுத்தோம். ஒரு சிறந்த அறக்கட்டளையை கட்டமைத்தோம். உலக அளவில் அனைத்து மக்களும் ஆரோக்கியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் வாழ அது உதவியது,

என்று கூறியுள்ளனர்.

மேலும்,

அறக்கட்டளை பணியில் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளோம். ஆனால், வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு செல்லும்போது ஒரு தம்பதியாக இணைந்து வளர முடியும் என்று நாங்கள் நம்பவில்லை

என்று கேட்ஸ் தம்பதி குறிப்பிட்டுள்ளனர்.

புதிய வாழ்வை முன்னெடுக்கும் பயணத்தில் தங்களுடைய தனி வாழ்வுக்கான இடத்தை கொடுத்து அதை மதிக்குமாறும் அந்த தம்பதி அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

 

 

Source: BBC


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்