தமிழக முதல்வராகிறார் மு.க. ஸ்டாலின் 

தமிழக முதல்வராகிறார் மு.க. ஸ்டாலின் 

தமிழக முதல்வராகிறார் மு.க. ஸ்டாலின் 

எழுத்தாளர் Staff Writer

03 May, 2021 | 2:07 pm

Colombo (News 1st) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

பதவியேற்பு நிகழ்வு எதிர்வரும் 07 ஆம் திகதி ஆளுநர் மாளிகையில் எளிய முறையில்  இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்குபெறும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடனான கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நாளை மாலை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக த ஹிந்து ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

முதல்வர் தமது இராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்து ஆண்டுகளின் பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடனான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடனான திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி கண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் 158 ஆசனங்களையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 76 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

தமிழக சட்டமன்றத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான ஆசனங்களின் எண்ணிக்கை 118 ஆகும்.

இம்முறை தமிழகத்தின் இரண்டு முன்னணி கட்சிகளும் தமது நீண்டகால தலைவர்களின்றி தேர்தலில் களம் கண்டன.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜே. ஜெயலலிதா 2016 இல் காலமானதுடன், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி 2018 இல் காலமானார்.

இவர்கள் இருவரும் காலமானதன் பின்னர் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அரசியலுக்குள் பிரவேசித்தார்.

எவ்வாறாயினும், இந்த தேர்தலில் அவரால் ஒரு ஆசனத்தையேனும் கைப்பற்ற முடியவில்லை.

​அத்துடன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், நடிகை குஷ்பு, தே.மு.தி.க கட்சியின் பொருளாலரும் அந்த கட்சியின் தலைவரான நடிகர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா ஆகியோர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.

50 வீத தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் ஒரு தொகுதியில் கூட அந்த கட்சி வெற்றிபெறவில்லை.

திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்கிய சீமானுக்கு மூன்றாவது இடமே கிடைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிமுகவின் வாக்குவங்கியை சிதறடிக்கும் என கூறப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் படுதோல்வியை சந்தித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்