தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி

தமிழகத்தில் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி

by Staff Writer 02-05-2021 | 8:19 PM
Colombo (News 1st) தமிழக சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த மக்களின் அமோக ஆதரவோடு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கவுள்ளது. இதற்கமைய, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 10 வருட ஆட்சி முடிவுக்கு வருகின்றது. தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6 ஆம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று (02) காலை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வௌியிடப்பட்டு வருகின்றன. தற்போது வரை வௌியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் 150 இற்கும் அதிகமான தொகுதிகளில் திராவிட முன்னெற்றக் கழக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 79 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி 04 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. இதற்கமைய மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த வெற்றியை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். தேர்தல் முடிவுகள் வௌியாகி வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனைத்தவிர, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான 30 தொகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி அங்கம் வகிக்கும் என்.ஆர். காங்கிரஸ் 15 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. காங்கிரஸ் கூட்டணி 6 தொகுதிகளிலும் ஏனைய கட்சிகள் 04 தொகுதிகளிலும் முன்னிலையிலுள்ளன. கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 95 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதற்கமைய பினராய் விஜயன் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பை பெற்றுள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 214 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 77 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய, மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி தொடர்ந்தும் நீடிக்க மாநில மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அஸாமில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணி 75 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 49 தொகுதிகளிலும் ஏனைய கட்சிகள் 02 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.