இந்திய பிரஜைகளுக்கு இலங்கையில் தனிமைப்படுத்தலில் ஈடுபட சந்தர்ப்பம்?

இந்திய பிரஜைகளுக்கு இலங்கையில் தனிமைப்படுத்தலில் ஈடுபட சந்தர்ப்பம்?

எழுத்தாளர் Staff Writer

02 May, 2021 | 8:59 pm

Colombo (News 1st) வேறு நாடுகளுக்கு பயணிக்கும் இந்திய பிரஜைகளுக்கு இலங்கையில் தனிமைப்படுத்தலில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை இன்று (02) செய்தி வெளியிட்டது.

இந்திய பிரஜைகள் தற்போது பெரும்பாலான நாடுகளுக்குள் பிரவேசிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் அதற்கு தீர்வாக 14 நாட்கள் பிறிதொரு நாட்டில் தனிமைப்படுத்தலில் இருந்து விட்டு தேவையான நாட்டுக்கு பயணிக்கலாம் என்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதனை இலக்கு வைத்துக்கொண்டு இலங்கையிலுள்ள பல சுற்றுலா முகவர் நிறுவனங்கள், இலங்கையில் தனிமைப்படுத்தல் சேவை வழங்கப்படும் என இந்தியர்களை கவரும் வகையில் விளம்பரம் செய்துள்ளன.

சுற்றாலா பபள் கோட்பாட்டை தவறாகப் பயன்படுத்தி முன்னணி முகவர் நிறுவனங்கள் இரண்டு இந்த செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாகவும் பின்னர் சிறு முகவர் நிறுவனங்களும் இந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை இன்றைய செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலைமை காரணமாக சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபை கட்டளைகள் அந்த தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் இடம்பெற வேண்டிய விதம் தொடர்பாக விதிமுறைகளை பிறப்பித்துள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டுக்கு வருகைதரும் இந்தியர்களை 14 நாட்கள் கால எல்லையின் பின்னர் வேறு நாடுகளுக்கு அனுப்பிவைக்கும் பொறுப்பு ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா முகவர் நிறுவனங்களுக்கு உள்ளதென அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைக்கு இந்த வரப்பிரசாதத்தை இந்தியர்கள் மாத்திரம் பயன்படுத்துவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் இந்த திட்டத்திற்கான வசதிகளை விஸ்தரித்து காலி, கம்பஹா, வத்துருகம, மாத்தளை, கிம்பிஸ்ஸ, நுவரெலியா, தங்காலை, நீர்கொழும்பு, கண்டி, கொழும்பு, திஸ்ஸமஹராமய, தெனியாய ஆகிய பகுதிகளிலுள்ள ஹோட்டல்களுக்கு இந்த வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ பத்திகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்