சர்வதேச தொழிலாளர் தினம்: ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து 

சர்வதேச தொழிலாளர் தினம்: ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து 

எழுத்தாளர் Staff Writer

01 May, 2021 | 3:36 pm

Colombo (News 1st) சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும்.

“மக்கள் நலன் சார்ந்த பணியிடம், பாதுகாப்பான தேசம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது.

கொரோனா தாக்கம் காரணமாக உலகம் முழுவதிலும் சர்வதேச தொழிலாளர் தின கொண்டாட்டங்கள் முடங்கியுள்ளன.

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர் சமூகத்தை பாதுகாக்க விரிவான திட்டமொன்று செயல்படுத்தப்பட்டு வருவதாக தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

COVID-19 தொற்றினால் உலகலாவிய ரீதியில் பல இலட்சம் பேர் தொழிலை இழந்துள்ளனர்.

இந்நிலையில், உழைக்கும் சமூகங்களை பெரிதும் பாதிக்கும் வறுமையை ஒழிப்பதற்கான தௌிவான பொருளாதார திட்டத்தை வகுத்து, அதனை செயற்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

COVID -19 தொற்றினால் தொழிலாளர் வர்க்கமே உலகளாவிய ரீதியில் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எனவே, உழைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கக்கூடிய வகையில் கட்டுப்பாடுகளை விதிக்காமல், அவர்கள் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததனூடாக அந்த மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த வழி செய்யப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்திற்கான திட்டத்துடன் கைகோர்க்கும் அனைவருக்கும் தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்த, அதனை அர்த்தப்படுத்திய மகிழ்ச்சியுடன் தாம் வாழ்த்து தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்.

இதேவேளை, உலகம் எதிர்கொண்டுள்ள பேரழிவு சூழ்நிலையில், இலங்கையின் உழைக்கும் மக்கள் அனைவரும், சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி மே தினத்தை புதிய வழியில் கொண்டாடுவார்கள் என எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியிலும் உழைக்கும் மக்களுக்கான உரிய மரியாதையை தமது அரசாங்கங்கள் வழங்கியுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

அத்துடன், தாம் தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியுடன் செயற்பட்டதாக மே தினத்தை முன்னிட்டு பிரதமர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்தபடி 1000 ரூபா நாளாந்த சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடிந்தமை தாம் பெற்ற வெற்றி என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், தொழிலாளர் சமூகத்தின் நலனை கருத்திற்கொண்டு ஊழியர் சேமலாப நிதி சட்டம், தொழில் பிணக்குகள் சட்டம் மற்றும் இழப்பீட்டு கட்டளை சட்டம் போன்ற பல தொழிலாளர் சட்டங்களை புதுப்பித்ததன் ஊடாக தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தமது அரசாங்கத்திற்கு இயன்றதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

நாட்டில் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் ஏற்கனவே கடுமையான வேலைவாய்ப்பு பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சுகாதார துறையினர், ஆசிரியர்கள், கடற்றொழிலாளர்கள், விவசாயிகள்,தோட்டத்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையான கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளதாக எதிர்கட்சி தலைவரின் மே தின அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரைத் துச்சமாக எண்ணி அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் பிரிவினர் தொடர்பிலும் ஆட்சியாளர்கள் கவனம் இழந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொரோனா பேரழிவு என்ற போர்வையில் தாய் நாட்டின் இறையாண்மை, மதிப்பு மற்றும் செழிப்பு ஆகியவற்றை காட்டிக்கொடுப்பதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனைகள் இன்றி முன்வருவதாகவும், உழைக்கும் அனைத்து மக்களுக்கும் சௌபாக்கியமான எதிர்காலம் உருவாக வாழ்த்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

உழைக்கும் மக்களின் உரிமைகள் சகலதும் வென்றிடவும், அரசியலுரிமையிலும் அபிவிருத்தியிலும் அன்றாட வாழ்விலும் தமிழர் தேசம் தலை நிமிர்வு பெற்றிடவும் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வௌிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்