பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி தொடர்பில் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு இடைநிறுத்தம்

by Staff Writer 30-04-2021 | 5:18 PM
Colombo (News 1st) பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி தொடர்பில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முற்றாக இடைநிறுத்தி கல்முனை நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி தொடர்பான வழக்கு கல்முனை நீதவான் I.N. ரிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்ற தடையுத்தரவினை மீறியதாக தொடரப்பட்ட வழக்கினை கல்முனை நீதவான் நீதிமன்றம் தொடர்ந்து நடத்தவும் அதன் மீது கட்டளை பிறப்பிக்கவும் மே 18 ஆம் திகதி வரை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து கட்டளை பிறப்பித்திருந்தது. இந்த நிலையிலேயே இந்த வழக்கு இன்று கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு மீளப்பெறப்படுமா என நீதவான் மனுதாரர்களான பொலிஸாரிடம் இதன்போது வினவியிருந்தார். எனினும், உயர்மட்டத்திலிருந்து அனுமதி பெற வேண்டும் என மனுதாரர்களால் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த வழக்கை முற்றாக இடைநிறுத்தி நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக பொலிஸாரினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவர்களில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் கோ.கருணாகரம், த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், மாணவர் மீட்பு பேரவை தலைவர் செ.கணேஷ் ஆனந்தம், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணை செயலாளர் அ.நிதான்சன் ஆகியோரை இன்று மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.