கொழும்பு துறைமுக நகர் சட்டமூலம் தொடர்பில் 05 ஆம் திகதி பாராளுமன்றில் விவாதம்

by Staff Writer 30-04-2021 | 3:33 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர் விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் 05 ஆம் திகதி விவாதம் நடத்தப்படும் என ஆளும் கட்சியினர் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது அறிவித்துள்ளனர். எனினும், மிக முக்கியமான இந்த சட்டமூலம் மீதான விவாதத்தை ஒரு நாளுக்கு மட்டுப்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கைக்கு ஆளும் கட்சியினர் இணக்கம் தெரிவிக்கவில்லை. கொழும்பு துறைமுக நகர் விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இதுவரை சபாநாயகருக்கு அறிவிக்கப்படாத நிலையில், எதிர்வரும் 05 ஆம் திகதி சட்டமூலம் மீது விவாதத்தை நடத்த ஆளும் கட்சி தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இதனால் குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார். எனினும், எதிர்வரும் 04 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கவுள்ளதாகவும் 05 ஆம் திகதி சட்டமூலம் மீதான விவாதத்தை நடத்தி சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஆளுங்கட்சியினர் அறிவித்ததாக அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். அதற்கமைய, எதிர்வரும் 05 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர் விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என ஆளுங்கட்சியினர் அறிவித்ததாகவும் அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.