கொடிகாமம் பொதுச் சந்தையில் நால்வருக்கு கொரோனா; சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

கொடிகாமம் பொதுச் சந்தையில் நால்வருக்கு கொரோனா; சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2021 | 5:04 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொதுச் சந்தையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

நேற்று (29) வட மாகாணத்தில் 719 பேருக்கு PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதுடன், அதில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் கொடிகாமம் பொதுச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு தொ்ற்று உறுதி செய்யப்பட்டதாகவும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.

பொதுச் சந்தையிலுள்ளவர்களுக்கும் அதனை அண்மித்த வர்த்தக நிலையங்களில் உள்ளவர்களுக்கும் PCR பரிசோதனை செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் – பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு கடமையாற்றிய பொலிஸார் பாலாலி பொலிஸ் நிலையத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், பொலிஸ் நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மக்கள், காங்கேசன்துறை, தெல்லிப்பழை, அச்சுவேலி பொலிஸ் நிலையங்களுக்கு சென்று தமது சேவையினை பெற்றுக்கொள்ள முடியும்.

இதனிடையே, கிளிநொச்சி பொலிஸார் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத 9 பேரை இன்று கைது செய்துள்ளனர்.

இன்று காலை முதல் கிளிநொச்சி பொதுச்சந்தை, பேருந்து நிலையத்திற்கு சென்று விசேட சோதனை நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்தனர்.

அத்துடன், முகக்கவசம் இல்லாது வீதிகளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் முகக்கவசங்களையும் வழங்கினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்