9 மாவட்டங்களில் 30 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

by Staff Writer 29-04-2021 | 8:35 PM
Colombo (News 1st) இன்று (29) மேலும் 1077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், 362 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். இதனிடையே திருகோணமலை மாவட்டத்திலுள்ள சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை தனிமைப்படுத்தப்பட்டன திருகோணமலை மாவட்டத்தின் உப்புவேலி பொலிஸ் பிரிவின் சுமேதகம்புர, மஹமயாபுர, முருகன் கோவிலடி மற்றும் லிங்கநகர் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சீனன்குடா பொலிஸ் பிரிவின் கவடிக்குடா, சீனன்குடா ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இன்றைய தினம் கிடைக்கும் அறிக்கைகளை ஆராய்ந்ததன் பின்னர் தேவை ஏற்பட்டால் மாத்திரம் மாலை வேளையில் தனிமைப்படுத்தலை மேற்கொள்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் நாட்டில் தொற்றாளர்கள் பதிவாகும் இடங்களை தனிமைப்படுத்துவதற்கான இயலுமை உள்ளதாகவும் இராணுவத் தளபதி கூறினார். 9 மாவட்டங்களில் உள்ள சுமார் 30 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இன்றும் பல்வேறு பகுதிகளில் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுகின்றார்களா என்பது தொடர்பில் ஆராயப்பட்டது. நிட்டம்புவ பகுதியில் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் வாகனங்கள் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு கடும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. பாதுக்க நகரிலும் இன்று சுகாதார வழிமுறைகளை மீறி செயற்படுவோரை கண்டறிவதற்கான விசேட தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. முகக்கவசம் அணியத்தவறியவர்கள் கொரோனா பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். மாளிகாவத்தையிலும் முகக்கவசம் அணியாதவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை, மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் 12 இடங்களில் இன்று எழுமாறாக Antigen பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நாட்டில் தற்போது எஞ்சியிருக்கும் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட Oxford Astrazeneca தடுப்பூசிகள் சுகாதாரப் பணியாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக ஏற்றப்படுகின்றன. சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் ராகம போதனா வைத்தியசாலைகளில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது. சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் Oxford Astrazeneca தடுப்பூசியின் இரண்டாம் கட்டத்தை ஏற்றும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், 5153 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. 3445 பேருக்கு நேற்று இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டது. இதேவேளை, பிரித்தானியாவின் திரிபடைந்த COVID வைரஸ் தொற்றியதாக சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொரலஸ்கமுவ பகுதியில் கட்டட நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற இடத்தில் சிலருக்கு இந்த வைரஸ் பரவியிருந்தமை ஏப்ரல் 8 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டதாக கலாநிதி சந்திம ஜீவந்தர நேற்று (28) கூறினார். இது தொடர்பாக பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வைரஸ் வகை பரவிய முதலாவது நோயாளியாக இலங்கைக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி வீரர் மொயின் அலி ஜனவரி 13 ஆம் திகதி பதிவானார். பிரித்தானியாவில் வேகமாக பரவுகின்ற COVID-19 திரிபடைந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளதாக கடந்த 13 ஆம் திகதி ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்ப்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே கூறினார்.