சீன பாதுகாப்பு அமைச்சர் நாடு திரும்பினார்

by Staff Writer 29-04-2021 | 11:51 AM
Colombo (News 1st) நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்ஹ (Wei Fenghe) நாடு திரும்பியுள்ளார். நேற்று முன்தினம் (27) இரவு நாட்டை வந்தடைந்த சீன பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சீன பாதுகாப்பு அமைச்சரை வழியனுப்புவதற்காக பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி உள்ளிட்டவர்கள் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். சீன பாதுகாப்பு அமைச்சருடன், சீன மக்கள் இராணுவ ஒத்துழைப்பு திணைக்களத்தின் பிரதித் தலைவர் மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பிலான பணிப்பாளர் நாயகம் லெப்டினன்ட் ஜெனல் ஷாட் யென்க்மின், மேஜர் ஷாட் யென்க்மின், மேஜர் ஜெனரல் சி க்விட்வெய் உள்ளிட்ட சீன இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் இலங்கைக்கான விஜயத்தில் பங்கேற்றிருந்தனர். சீன இலங்கை பாதுகாப்பு தலைமை அதிகாரிகளுக்கிடையிலான விசேட இருதரப்பு கலந்துரையாடல் நேற்று கொழும்பில் நடைபெற்றதுடன், அதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு ஒழுங்குமுறை உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்டது. உடன்படிக்கையில் இலங்கை சார்பில் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, சீனா சார்பில் அந்நாட்டின் மத்திய இராணுவ ஆணைக்குழுவின் சர்வதேச இராணுவ விவகார பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் சீ கோவேய் ஆகியோர் கையொப்பமிட்டனர்.