சீன பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சுவார்த்தை

by Bella Dalima 28-04-2021 | 8:08 PM
Colombo (News 1st) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Wei Fenghe இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்தார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். ​ பங்களாதேஷூக்கான ஒரு நாள் விஜயத்தை நிறைவு செய்து சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Wei Fenghe நேற்றிரவு இலங்கையை வந்தடைந்தார். பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன விமான நிலையத்தில் சீன பாதுகாப்பு அமைச்சரை வரவேற்றார். இதனையடுத்து, அவர் இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். ஜனாதிபதிக்கும் தமக்குமிடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்திருந்ததாக சீன பாதுகாப்பு அமைச்சர் இங்கு குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் இந்த விஜயத்தின் மூலம் மேலும் வலுப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான சீன தூதுவர் ஷி சென்ஹோன், சீன மக்கள் இராணுவ ஒத்துழைப்பு திணைக்களத்தின் பிரதித் தலைவர் மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பிலான பணிப்பாளர் நாயகம் லெப்டினன்ட் ஜெனல் ஷாட் யென்க்மின் உள்ளிட்ட சிலரும் இந்த சந்திப்பின்போது பிரசன்னமாகியிருந்தனர். ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர், சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Wei Fenghe பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார்.