by Bella Dalima 28-04-2021 | 5:57 PM
Colombo (News 1st) இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது.
வட மாநிலங்களில் 30 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதால், ஒக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், வட மாநிலங்களில் வன்முறைகளும் இடம்பெற ஆரம்பித்துள்ளன.
வைத்திசாலைகளில் ஒக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை உயர்ந்து செல்கிறது.
இதனால் ஆத்திரமடையும் உயிரழந்தவர்களின் உறவினர்கள் வைத்தியசாலைகளை சேதப்படுத்தும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் ஒன்றரை வயது குழந்தையை வைத்தியசாலையில் சேர்க்க முடியாமல் பல மணி நேரங்கள் அம்பியூலன்ஸில் வைத்தபடியே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அந்தக் குழந்தை உயிரிழந்ததை அடுத்து, பெற்றோர் கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 62 வயது பெண்ணொருவர் உயிரிழந்தார். இதனையடுத்து வைத்தியர்களின் கவனக்குறைவே உயிரழப்பிற்கு காரணம் என தெரிவித்து குறித்த பெண்ணின் உறவினர்கள் வைத்தியசாலையை சேதப்படுத்தியுள்ளனர்.
மும்பையில் கடைகளை மூடுமாறு பொலிஸார் அறிவித்ததை அடுத்து, அங்கிருந்த கடைக்காரர்கள் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், பீகார் ஆகிய மாநிலங்களில் ஒக்சிஜன் சிலிண்டர்களை நிரப்பிக்கொள்வதற்காக பெருந்திரளான மக்கள் ஆலைகளுக்கு முன்பாக காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டாலும், இன்னும் கவனயீனமாக நடந்துகொள்ளும் ஒரு சாராரும் இருக்கவே செய்கின்றனர்.
சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணத்தை அறிந்துகொண்ட சுகாதார தரப்பினர் அவ்விடத்திற்கு சென்று திருமண அத்தாட்சிப் பத்திரத்தை கிழித்தெறிந்து அங்கிருந்தவர்களை எச்சரித்து வெளியேற்றியுள்ளனர்.