கிராமங்கள் பல தனிமைப்படுத்தல்; கொழும்பில் அதிகளவில் COVID தொற்றாளர்கள் பதிவு

by Staff Writer 27-04-2021 | 8:30 PM
Colombo (News 1st) அதிகளவில் COVID நோயாளர்கள் பதிவாகியமையினால், திவுலப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் 245 COVID நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதனிடையே, மினுவாங்கொடை, அஸ்செல்லவத்தை பிரதேசம் நேற்று (26) இரவு முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அதிகளவில் COVID நோயாளர்கள் பதிவாகியுள்ளமையினால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மாத்தளை - உக்குவலை பல்லேகும்புர பிரதேசத்தில் 32 COVID நோயாளர்கள் பதிவாகியமையினால், குறித்த பகுதியை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹிங்குரக்கடை - சிறிகெத்த கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கும் நேற்று 18 COVID நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நேற்று இரவு 8 மணி முதல் ரத்கம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட இம்புல்கொட, கடுதம்பே கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 26 ஆம் திகதி குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான (173) COVID நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று பதிவான 997 COVID நோயாளர்களுடன் நாட்டில் பதிவான மொத்த COVID தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,02,375 ஆக அதிகரித்துள்ளது. COVID மரணங்களின் எண்ணிக்கையும் 647 ஆக அதிகரித்துள்ளது. தொற்று நோய் ஒழிப்புப் பிரிவிற்கு அமைய, இலங்கையின் சனத் தொகையில் ஒரு மில்லியன் பேருக்கு 29 COVID மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் அந்த எண்ணிக்கை தற்போது 128 ஆக அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு 7 மணி முதல் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக இன்று மரக்கறிகளை ஏற்றி வந்த விவசாயிகள் கடும் சிரமங்களுக்குள்ளாகினர். பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதால், மொத்த வியாபாரிகள் தமது அறுவடையை தம்புளைக்கு பிரவேசிக்கும் பிரதான வீதியின் இருமருங்கிலும் விற்பனை செய்ய முயன்றதுடன், பொலிஸார் அவர்களை அங்கிருந்து வௌியேற்ற நடவடிக்கை எடுத்தனர். தம்புள்ளபொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதால், பெரும் எண்ணிக்கையிலானோர் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்று சென்றிருந்தனர். அங்கு சுகாதார விதிமுறைகளை பின்பற்றத் தவறியவர்களை பொது சுகாதார பரிசோதகர்கள் கடுமையாக எச்சரித்ததையும் காண முடிந்தது.