எதிர்க்கட்சித் தலைவருக்கும் வௌிநாட்டுத் தூதுவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

by Staff Writer 27-04-2021 | 5:44 PM
Colombo (News 1st) இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் உள்ளிட்ட இராஜதந்திர அதிகாரிகள் இன்று பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு இன்று பிற்பகல் வருகைதந்த அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, நோர்வே மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும், உயர்ஸ்தானிகர்களும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அத்துகோரல, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இரான் விக்ரமரத்ன உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் அறிவித்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் வௌிநாட்டு கொள்கை வகுப்பாளர் சபையின் சிரேஷ்ட உறுப்பினர்களான கலாநிதி ரொஹான் பல்லேவத்த, கலாநிதி கிஹான் குணதிலக்க, ஹரீம் பீரிஸ் ஆகியோரும் வௌிநாட்டு இராஜதந்திர அதிகாரிகளுடனான இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் 04 நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று முற்பகல் சந்தித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான தூதுவர் டெனிஸ் சைபீயின் தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளின் தூதுவர்களே இன்று முற்பகல் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து கலந்துரையாடினர்.