by Staff Writer 27-04-2021 | 4:12 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக இலங்கைக்கு வருவதற்காக தமிழகத்தின் தனுஷ்கோடியில் தங்கியிருந்த பங்களாதேஷை சேர்ந்த நபர் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனுஷ்கோடி பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபரொருவர் நடமாடுவதாக தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (27) காலை இடம்பெற்ற ரோந்து நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
தனுஷ்கோடி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டவர் பங்களாதேஷ் பிரஜை என்பது தெரியவந்துள்ளது.
குறித்த நபர் பங்களாதேஷில் இருந்து கொல்கத்தா ஊடாக ராமேஸ்வரத்திற்கு வருகை தந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து இலங்கைக்கும் பின்னர் மாலைத்தீவிற்கு செல்ல திட்டமிட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.