வட்டுவாகல் வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 25-04-2021 | 8:49 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இளைஞர் காயமடைந்துள்ளார். வட்டுவாகல் பகுதியில் இன்று (25) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இதன்போது காயமடைந்த 20 வயதான மற்றுமொரு இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். காயமடைந்த இளைஞன் முல்லைத்தீவு வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞன் தனது தாயை பார்க்கச் சென்று திரும்பிய போது, காட்டுப் பகுதியில் வெடிச் சம்பவம் ஏற்பட்டதாக வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற பகுதி கன்னிவெடி அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் பிரதேசம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். எனினும், எவ்வாறு அங்கு வெடிச் சம்பவம் ஏற்பட்டது என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என அவர் குறிப்பிட்டார். வெடிச் சம்பவத்தின் போது இரண்டு இளைஞர்களினதும் கால்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு விசேட நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.