கொரோனாவை இல்லாதொழிக்க தடுப்பூசியே தீர்வு- ஜனாதிபதி

கொரோனா தொற்றை இல்லாதொழிக்க தடுப்பூசியே தீர்வு - ஜனாதிபதி 

by Staff Writer 25-04-2021 | 2:48 PM
Colombo (News 1st) COVID - 19 வைரஸ் தொற்றை இல்லாதொழிப்பதற்கு தடுப்பூசி ஏற்றுவதே ஒரே தீர்வு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அதற்கமைய, மக்களுக்கு தடுப்பூசியை ஏற்றுவதற்கான திட்டமிடப்பட்ட பொறிமுறை அரசாங்கத்திடம் காணப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த சவாலை வெற்றிகொள்ள வேண்டுமாயின், கொரோனா தொற்று ஆரம்பமாகிய முதலாவது சந்தர்ப்பத்தில் சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை உரிய வகையில் பொதுமக்கள் பின்பற்றல் வேண்டும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை நாட்டிற்கு கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை இல்லாதொழிப்பதற்கான தீர்வாக நாட்டை முடக்க வேண்டும் என சிலர் யோசனை முன்வைத்தாலும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு அந்த யோசனை பாரிய அச்சுறுத்தலாக அமையும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதனால், பொருளாதார நடவடிக்கைகளை முழுமையாக முடக்கி, ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு ஏற்புடையது அல்லவென ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அரசாங்கம் தனது கடமைகளை உரியவாறு மேற்கொள்ளும் போது, பொதுமக்கள் தங்களுக்கான பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.