இலங்கை - பங்களாதேஷ் டெஸ்ட்; சமநிலையில் நிறைவு

இலங்கை - பங்களாதேஷ் இடையிலான முதலாவது டெஸ்ட்; சமநிலையில் நிறைவு

by Staff Writer 25-04-2021 | 6:43 PM
Colombo (News 1st) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. 3 விக்கெட் இழப்புக்கு 512 ஓட்டங்களுடன் இலங்கை அணி அதன் முதல் இனிங்ஸை தொடர்ந்தது. அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மேலதிகமாக 10 ஓட்டங்களைப் பெற்றபோது, 244 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தனஞ்சய டி சில்வாவும் 166 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வனிது ஹசரங்க 43 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 31 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 8 விக்கெட்களை இழந்து 648 ஓட்டங்களை பெற்றிருந்த போது, ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. 107 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இனிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷின் முதல் விக்கெட் 21 ஓட்டங்களுக்கும் இரண்டாவது விக்கெட் 27 ஓட்டங்களுக்கும் வீழ்த்தப்பட்டன. கடந்த இனிங்ஸில் 150 ஓட்டங்களுக்கும் மேல் பெற்ற நஜ்முல் ஹுசைன் ஷன்ரோ ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்தார். இருப்பினும், அதன்பின்னர் ஜோடி சேர்ந்த தமிம் இக்பால் மற்றும் மொமினுல் ஹஹ், பிரிக்கப்படாத 3 விக்கெட்டில் 73 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்தது. இந்தநிலையில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்ட போது பங்களாதேஷ் அணி அதன் இரண்டாம் இனிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. தமிம் இக்பால் 74 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். எனினும் மழை தொடர்ந்தமையால் போட்டி சமநிலையில் முடிவுக்கு வந்தது. கண்டியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 541 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவானார்.