by Bella Dalima 24-04-2021 | 7:44 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் அவரது சகோதரரான ரியாஜ் பதியுதீனும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணையின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அவர்கள் இருவரையும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பௌத்தாலோக மாவத்தையில் உள்ள அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதன்போது, தன்னை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போல் கைது செய்ய வந்ததாக பொலிஸ் அதிகாரியிடம் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
தன்னைக் கைது செய்வதில் ஏன் இவ்வளவு அவசரம் என கேள்வி எழுப்பிய ரிஷாட் பதியுதீன், வருமாறு அறிவித்திருந்தால் தானாக வந்திருக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
தனது கைது விவகாரம் தொடர்பில் ரிஷாட் பதியுதீன் சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றையும் வௌியிட்டுள்ளார்.
எவ்வித குற்றமும் செய்யாத தன்னை நடுச்சாமத்தில் கைது செய்து அழைத்துச் செல்வது அரசியல் பழிவாங்கல் எனவும் எவரும் பேசக்கூடாது என்பதற்காக செய்யப்படும் சதி எனவும் அந்த காணொளியில் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைது தொடர்பில் பொலிஸார் விளக்கமளித்தனர் .
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் விசேட விதிமுறைகளின் கீழ் கைது செய்யப்பட்டதன் பின்னர் 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அதிகாரம் தமக்கு இருப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
அவரிடம் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து, தேவை ஏற்படின் 9/1-இன் கீழ் தடுத்து வைத்து 90 நாட்கள் விசாரிக்கும் அனுமதியைப் பெற முடியும் எனவும் அஜித் ரோஹன கூறினார்.
எனினும், பாராளுமன்ற உறுப்பினரையும் அவரது சகோதரரையும் நள்ளிரவில் கைது செய்த போது, கைதிற்கான எவ்வித காரணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என சந்தேகநபர்களின் சட்டத்தரணியான ருஷ்டி ஹபீப் தெரிவித்தார்.
இவர்கள் குண்டுதாரிகளுக்கு உதவியதாகவோ அல்லது ஒத்துழைத்ததாகவோ எவ்வித ஆதாரங்களையும் ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கண்டறிய முடியவில்லை எனவும் சட்டத்தரணியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கைதுகள் அரசியல் நோக்கமுடையது எனவும் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் மீதான பழிவாங்கும் செயற்பாடாக அமைவதாகவும் அவரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுத்திருந்தால், கைது செய்யப்பட்ட இருவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருப்பார்கள் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவும் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டதாக சரத் வீரசேகர குறிப்பிட்டார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 8 கோவைகள் தற்போது சட்ட மா அதிபரிடம் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், பொலிஸார் தொடர்ந்து மேற்கொள்ளும் விசாரணைகளின் பின்னர் படிப்படியாக குறித்த நபர்கள் கைது செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.