மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் சடுதியாக அதிகரிப்பு

by Staff Writer 24-04-2021 | 3:17 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் மீண்டும் சடுதியாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சில பகுதிகளில் தற்போது இளம் வயதினரே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளை விட தற்போது ஏற்பட்டுள்ள தொற்று நிலை மிகவும் அபாயகரமானது என அவர் கூறினார். ஒரு நோயாளரிடமிருந்து ஒரே தடவையில் பருக்கு தொற்று பரவக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உபுல் ரோஹன குறிப்பிட்டார். பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமையால், தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரிக்கை விடுத்தார். இதேவேளை, கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியிலும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி கார்திகேசு ஶ்ரீபிரதாபன் தெரிவித்தார். நேற்று மேலும் 04 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளன. வத்தளையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த 18 வயதான யுவதி ஒருவர் கடந்த 21 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். COVID நிமோனியா மற்றும் இருதய நோயால் இந்த யுவதி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார். பன்னிப்பிட்டியவை சேர்ந்த 40 வயதான ஆண் ஒருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். COVID தொற்றுடன் இரத்தம் விசமடைந்தமை , சிறுநீரக நோய் காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹரகம பகுதியை சேர்ந்த 71 வயதான பெண்ணொருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். வௌிநாட்டிலிருந்து வருகை தந்த இந்த பெண், தனது வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரிக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். இதேவேளை, நிட்டம்புவ பகுதியை சேர்ந்த 35 வயதான ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மினுவாங்கொட ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், அங்கிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் கடந்த 21 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். COVID தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய , நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 99,691 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரில் 94 ,036 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றுக்குள்ளானோரில், 5 ,021 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.