நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்தது

by Staff Writer 24-04-2021 | 8:09 PM
Colombo (News 1st) ஓராண்டு காலப்பகுதியில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை (100,517) ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது. அவர்களில் 94,155 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 827 கொரோனா நோயாளர்கள் இன்று (24) அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. இதேவேளை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் அதிகாரிகொட கிராம சேவகர் பிரிவு இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டது. அதிகாரிகொட கிராம சேவகர் பிரிவில் கொரோனா தொற்றுடன் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டதால், அந்த பகுதியை இன்று மாலை தனிமைப்படுத்தியதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் கொரோனா தொற்றுக்குள்ளான 18 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர். இதற்கு முன்பு தனிமைப்படுத்தப்பட்ட குருணாகல் - கனேவத்த பகுதியில் தித்தவெல்கால கிராம சேவகர் பிரிவு, குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு, நீராவி மற்றும் நிகந்தலுபொத கிராம சேவகர் பிரிவு என்பன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கனேவத்த ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்தாதிருக்க ரயில்வே திணைக்களம் எடுத்த தீர்மானம் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கனேவத்த ரயில் நிலையத்தை சூழவுள்ள 5 கிராமங்கள் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டதால், ரயில்களை நிறுத்துவதில்லை எனும் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவில் கல்கம்முல்ல பகுதியில் சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தமையை காண முடிந்தது. இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்திலேயே அதிகளவிலான கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு 251 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 236 கொரோனா நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 194 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் 111 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10,643 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மாத்திரம் 12,438 COVID பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ன. இதனிடையே, கொரோனா புதிய பிறழ்வை அறிந்துகொள்வதற்கான பரிசோதனைகளின் நிலைமை தொடர்பில் ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தௌிவுபடுத்தினார். மரபணு பிறழ்வின் மூலமாகவே பரவுவதாக தாம் கண்டறிந்துள்ளதாகவும் இது தொடர்பான பரிசோதனை கட்டமைப்பு நாளை (25) இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.